ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை செய்யும் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தில் இருக்கும் அதிருப்தியடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் குறித்து திருப்தியின்றி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து கொண்டு இந்த திட்டத்தை செயற்படுத்துவது பற்றி சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியதை அடுத்தே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்திக்குள் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக தற்போது சஜித் பிரேமதாச பதவி வகித்து வருகிறார்.
அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக பதவிக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்த யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.