மதுரையில் முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த நாயை கால்நடை மருத்துவர் ஒருவர், போராடி உயிரை காப்பாற்றினார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகேயுள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்த குரு என்பவரது வீட்டில் இரண்டரை வயதுடைய புருனோ என்ற லேப்ரடார் இன வகையை சேர்ந்த நாய் ஒன்று வளர்ந்து வருகிறது.
இந்த நாய் கடந்த 9 நாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில் சோர்வாகவே இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து குரு, சோர்வாக இருந்த நாயை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் வைத்து நாயின் உடலை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், நாயின் வயிற்றில் மனிதர்கள் பயன்படுத்தகூடிய துணியால் ஆன முகக்கவசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
இதன்காரணமாக உணவுக்குழாயக்கு உணவு செல்லாத காரணத்தால் நாய் உணவு உண்ண முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவர் இரண்டு பாட்டீல் குளுக்கோஸ், வாமிட்டிங் சிகிச்சை மூலமாக நாயின் வயிற்றில் இருந்த முகக்கவசத்தை முழுவதுமாக அகற்றினர்.
இந்த நாய் தற்போது மீண்டும் உற்சாகமாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
பொதுமக்களின் அலட்சியத்தால் விலங்குகளே பாதிக்கப்படுகின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கே இந்த நிலைமை என்றால், தெரு நாய்கள் எல்லாம் சொல்லவா வேண்டும், பொதுமக்கள் இனியாவது சாலைகளில் முகக்கவசத்தை விடுவதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.