மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ்தவ மயானத்தில் கடந்த 4ஆம் திகதி புதைக்கப்பட்ட விதுஷனின் சடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை உயிரிழந்தார்.
இந்த நிலையில் விதுஷனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை தான் கண் முன்னே பார்த்ததாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 18ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்த சந்திரன் விதுஷனின் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகி இருந்தார்.
அவர் குறித்த வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில், புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை மீண்டும் 21ஆம் திகதி தோண்டி எடுத்து இலங்கையில் இத்துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த இளைஞர் 4 ஐஸ் போதைப் பொருள் பக்கட்டுக்களை விழுங்கிய நிலையில், அது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.