ஸ்ரீலங்காவிற்கு சொந்தமான வான் பரப்பில் சீனா மற்றும் பாகிஸ்தானின் பயணங்கள் குறித்து கண்காணிப்பு செய்ய இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா வான் பரப்பை கண்காணிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்து ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு விழிப்புடன் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.
இந்து சமுத்திரத்தில் ஸ்ரீலங்கா – சீனாவிற்கு இடையிலான நெருக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், வான் பரப்பை கண்காணிப்பு செய்ய இந்தியா ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்தப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்காவில் சீனாவின் செயற்பாடுகள் கோலோச்சியுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அது மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே இந்து சமுத்திர வலயப் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக ப்ரடேர் (predator) ரக ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை இந்தியா அமெரிக்காவிடம் கொள்வனவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்த ஆளில்லா விமானங்கள் கடலோரப் பாதுகாப்புப் பிரிவுக்கும் அதேபோல கடற்படைக்கும் மிகவும் உதவியாக அமையும் என இந்திய கடற்படையின் உப பிரதானியான வைஸ் அட்மிரல் ஜி அஷோக் குமார் தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
விசேடமாக இந்து சமுத்திர வலயத்தில் இந்தியாவுக்கு அருகே பயணிக்கின்ற விமானங்கள் பற்றி கண்காணிப்பு செய்வது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் வினவினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல,
இந்தியா எடுத்துவரும் இந்த நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு தலையிட்டுள்ளதாக கூறினார்.
இதன்போது மேலும் பதிலளித்த அவர், வலய பாதுகாப்புப் பிரச்சினைகள் அன்றிலிருந்து பூகோள அரசியலில் எழுந்துவருகின்றன. வரலாற்றிலிருந்தே அந்தப் பிரச்சினைகள் உள்ளன.
அவற்றை இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி எதிர்காலத்திலும் அதே அப்பியாசங்களில் ஈடுபட எதிர்பார்க்கின்றோம். இந்தியத் தரப்பில் அமெரிக்காவிலிருந்து கண்காணிப்பு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம், அதனால் இப்படியான விடயங்கள் என்று சில ஆருடங்கள் வெளியிடப்படாலும் அவற்றை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம்.
இந்தப் பூகோள அரசியலில் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறு சந்தேகத்திற்கு இடமான பல இடங்களும் உள்ளன. அவ்வாறு எந்த நிகழ்வுகளும் இடம்பெறாது என நாங்கள் சொல்லவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அதுபற்றி நடவடிக்கை எடுப்போம்.
இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம் என்றார்.
இந்த நிலயைில், ஸ்ரீலங்கா வான் பரப்பில் இந்தியாவின் தலையீடு பற்றி ஐ.பி.சி தமிழ் செய்திப்பிரிவு, ஸ்ரீலங்கா விமானப்படையின் பதில் பேச்சாளராக விங் கமாண்டர் (IJESHE CHANDRATHILAKE) ஐஜெஷ் சந்திரதிலக்கவிடம் வினவியது.
இதற்குப் பதிலளித்த அவர், ஸ்ரீலங்காவிற்கு சொந்தமான அல்லது ஸ்ரீலங்காவுக்கு அருகேயுள்ள வான் பரப்பை கண்காணிக்கவோ அல்லது ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்துவது பற்றியோ இந்திய தரப்பிலிருந்து இதுவரை ஸ்ரீலங்காவிடம் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனக் கூறினார்.
எவ்வாறாயினும், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஸ்ரீலங்கா கொண்டுள்ள உறவுநிலை வலுவுற்றுள்ள நிலையில், அதனால் இந்தியாவின் கடல் மார்க்கம் மற்றும் தரைமார்க்கப் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலாகிவிட்டதாகவும் அதனாலேயே இந்தியாவினால் 30 ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் கொள்வனவு செய்யப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சேன் டியாகோ (san dieago) என்கிற நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள MQ-9B என்ற பெயரிலான ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள், சுமார் 48 மணிநேரம் வானில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடியது என்றும், வெறும் ஆயிரத்து 700 கிலோ கிராம் எடையை இந்த விமானம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.