கொழும்பு துறைமுக கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கு உள்ளான காரணத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பல் விபத்தினால் பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையிலான கடற்பரப்புக்களில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மீனவருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபா நட்டஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றில் நேற்றைய தினம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை செயற்பாட்டாளரான சரத் இத்தமல்கொட அருட்தந்தையும் மேலும் சில மீனவர்களும் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுக விவகார அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, துறைமுக அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட 12 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.