பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவலில் உச்சம் என்றும் இலங்கை பெரும் சவாலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் உரையாற்றவுள்ளார்.
தற்போது இலங்கை கடும் நெருக்கடியில் இருப்பதை ஆளும் தரப்பினர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு 8.30 மணிக்கு உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையும் தளர்த்தப்பட்டுள்ளமை, துமிந்த சில்வா போயா தினத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை, நாட்டின் பொருளாதார நிலைமை, சர்வதேச அழுத்தங்கள், எதிர் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், பல்கலைக்கழகம் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், மீனவர்களின் ஆர்ப்பாட்டம், நிவாரணம் கோரி மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் என்று பெரும் சவாலை அரசாங்கம் கொண்டிருக்கிறது.
இச்சூழ்நிலையில், ஜனாதிபதி எந்த விடயத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் போகிறார் என்ற ஆர்வம் தற்போது அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.
இதேவேளை, அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியிருக்கிறார். அவருக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தென்னிலங்கையில் பரவலாக பேசப்படுகிறது.
இந்தநிலையில், கோட்டாபயவின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதிக எதிர்பார்ப்புள்ளதாகவும் அமைந்திருக்கிறது.