கோவிட் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளில், படையினரை விமர்சித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற கன்னி உரை கருத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் தடுப்பை அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்த ரணில் விக்ரமசிங்க அந்த விடயத்தில் இராணுவ தளபதியை விமர்சித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
2002ஆம் ஆண்டு அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு ரணில் விக்ரமசிங்க கேட்ட போது அதற்கு தாம் உடன்படவில்லை என்றும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கவிடம் அது தொடர்பில் முறையிட்டதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சிற்றுண்டி உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்தை கடத்திச் செல்வது போன்ற தவறான செயல்களில் சில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டதை காண முடிந்தது.
தமது அரசாங்கம் அதிகாரத்திற்கு வரும்போது அத்தகைய அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அரச புலனாய்வு சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்ற ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிக்கையுடன் உடன்பட முடியாது என்று பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவர் தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு நியமனங்கள் வழங்குவதன் மூலம் அரச புலனாய்வு சேவைகளை பலப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.