தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார்.
முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.
இந்த நிலையில், 5-ந்தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொது போக்குவரத்து இயங்கி வரும் நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. அதைத் தொடர்ந்து நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.
தமிழகத்தில் ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தர திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு அதிகமிருந்த கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அரசு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.