பிலிப்பைன்ஸ் நாட்டில் 96 இராணுவ வீரர்களுடன் பயணித்த விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் தரையில் மோதுவதற்கு முன்னர் பல இராணுவ வீரர்கள் அவசர வாசல் வழியாக வெளியே குதித்ததால் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
தலைநகர் மணிலாவில் இருந்து 600 மைலகள் தெற்கே இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது. இதில் 4 பொதுமக்களுடன் 53 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5 ராணுவ வீரர்கள் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுவரை 45 பேர்கள் இறந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு ராணுவ வீரர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
ஜோலோ தீவில் தரையிறங்கும் முயற்சியின்போது, ஓடுபாதையை தவறவிட்டதால் விமானம் சிறிது தூரத்திற்கு சென்று தரையில் மோதியது. இதில் சம்பவயிடத்தில் 17 பேர் பலியாகினர்.
33 ஆண்டுகள் பழக்கம் கொண்ட இந்த விமானமானது அமெரிக்கா அரசாங்கம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு வழங்கியதாகும். மட்டுமின்றி, விபத்துக்குள்ளான விமானம் சி-130 ஹெர்குலஸ் இராணுவ வீரர்களுக்கான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் விமானம் ஆகும்.
இந்த வகை விமானங்கள் பல ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும் உள்ள விமானப்படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. படை வீரர்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களை கொண்டு செல்ல இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் மனிதாபிமான உதவிகள் வழங்கவும், பேரழிவு காலங்களில் நிவரணப் பொருட்களை கொண்டு செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது விபத்தில் சிக்கிய விமானம் தொடர்பில் முழு விசாரணைக்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் மற்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.