பிரான்சில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான 20 சொத்துகளை முடக்க அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தது. அங்கு, கெய்ர்ன் நிறுவனத்துக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், 2020ம் ஆண்டு இறுதி வரைக்குமான கணக்கீட்டின் படி, வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்திய அரசு தர வேண்டும் என, கெய்ர்ன் தெரிவித்து உள்ளது.
அத்துடன் இந்தியா, தொகையைத் திருப்பி வழங்காத பட்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம் என்றும் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய அரசுக்குச் சொந்தமான 20 சொத்துக்களை முடக்குவதற்கான நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை பிளாட்கள் எனவும், இவற்றின் மதிப்பு 20 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 11ம் தேதி கெய்ர்ன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், இந்தியாவிற்குச் சொந்தமான சொத்துகளை முடக்க உத்தரவிட்டதாகவும், அன்று மாலையே அதற்கான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், பிளாட்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் எண்ணம் அந்த நிறுவனத்திற்கு இல்லை எனவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அந்த சொத்துக்களை இந்திய அரசால் விற்க முடியாது எனத் தெரிகிறது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளது.