பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளதாக அரச தரவுகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,022,893 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் மேலும் 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 35 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 545,693 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 417 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,348,864 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, அம்பர் பட்டியல் உள்ள நாடுகளில் இருந்து திரும்பும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரித்தானியர்கள் ஜூலை 19 முதல் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிரித்தானியர்கள் நாடு திரும்பும்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று கருத்து வெளியிடுகையில், “15 மாதங்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
அம்பர் பட்டியல் உள்ள நாடுகளிலிருந்து வரும், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டு உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.