ஸ்ரீலங்கா பொலிஸ் இராஜ்ஜியமாக மாற்றமடைந்துவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
மக்கள் மீதான அடக்கு முறை மற்றும் பொலிஸ் அராஜகத்தை அரசாங்கம் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை மூடிமறைப்பதற்காக மக்கள் மத்தியில் எழுகின்ற போராட்டங்கள், எதிர்ப்பை அடக்குறையின் ஊடாக கையாள முயற்சிக்கின்றது. அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் ஊடாக கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
பொலிஸ் ஊடாக பொலிஸ் இராஜியத்தை ஸ்ரீலங்காவில் ஏற்படுத்த அரசாங்கம் இன்று ஈடுபட்டு வருகின்றது. மக்களின் உரிமைகளை கொவிட் சட்டம் என்றுகூறி அவற்றைப் பறிக்கப் பார்க்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நேற்றுமுன்தினம் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டங்களை நடத்திய அரசியல்வாதிகள், மக்கள் என பலரையும் பொலிஸார் கைது செய்தனர்.
எனினும் உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தை நாங்கள் மதிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரத்தை நீதிமன்றம் மதித்து அவர்களுக்குப் பிணை விடுதலையை அளித்தபோது.
அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பொலிஸ் அழைத்துச் சென்றுள்ளது.இது சட்டவிரோதமான செயற்பாடாகும்.
இன்று ஸ்ரீலங்காவிலிருந்து தொழில்வாய்ப்பு மற்றும் நாட்டை விட்டுச் செல்வதற்காக சுமார் ஆறரை இலட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா வரலாற்றில் அதிகூடியவளவானவர்கள் நாட்டை விட்டுச்செல்ல முயற்சி செய்கின்ற சந்தர்ப்பமாக இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.