இங்கிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ’பாய்ந்து பிடித்த கேட்ச்’ ஒன்று, சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இணையத்தில் அந்த வீடியோ வைரலலாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி 18 ரன்கள் (டி/எல் முறையில்) வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார்.
நார்தாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. நாட் ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்தார். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இந்திய அணிக்கு 8.4 ஓவர்களில் 73 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது. ஷஃபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய அணியால் இலக்கை விரட்ட முடியாமல் போனது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 19-வது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்சர் அடிக்க முயன்றார். பந்து சிக்சர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார். கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்ல இருந்தார் ஹர்லீன். உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று அடுத்த நொடி உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ இந்த பந்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
A fantastic piece of fielding 👏
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
— England Cricket (@englandcricket) July 9, 2021