இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி -20 போட்டியில் நியூசிலாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நேற்று (10.11.2024)இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக வில் யங்(Will Young) 30 ஓட்டங்களையும், ஜேஸ் கிலக்சன்(Josh Clarkson) 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து அசரங்க(Wanindu Hasaranga) 04 விக்கெட்டுக்களையும் மதிஷா பத்திரன(Matheesha Pathirana) 03 விக்கெட்டுக்களையும், நுவான் துசார(Nuwan Thushara) 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து109 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பத்தும் நிசங்க(Pathum Nissanka) அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குசன்(Lockie Ferguson) மற்றும் க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.