பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்திலிருந்து பெஷாவருக்குப் புறப்படும் “ஜாஃபர் எக்ஸ்பிரஸ்” என்ற ரயிலிலேயே இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
இதனால், ரயிலில் ஏறுவதற்காக திரண்டிருந்த அநேகமான பயணிகள் உட்பட மொத்தம் 62 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அதேவேளையில், இறந்தவர்களில் தற்கொலை குண்டுத்தாரியும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஒரு மகளிர் பாடசாலை மற்றும் வைத்தியசாலைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்துள்ளது.
பாகிஸ்தானில், குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் கடந்த ஆண்டு முதல் பயங்கரவாத சம்பவங்களினால் கடுமையாக போராடி வருகின்றன.