வேறுபட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளைக் கலந்து பொருத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது ஒரு ஆபத்தான போக்கு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சுகாதார பாதிப்பு குறித்து கூடுதல் தரவு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகளின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அளவை எப்போது, யார் எடுத்துக்கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் தீர்மானிக்கத் தொடங்கினால் அது நாடுகளில் குழப்பமான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஜூன் மாதத்தில் தடுப்பூசிகளைப் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் மூலோபாய ஆலோசனைக் குழு நிபுணர்கள், எஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது அளவு கிடைக்கவில்லை என்றால் ஃபைசர் தடுப்பூசியை எஸ்ட்ராசெனெகாவின் ஆரம்ப அளவுக்கு பிறகு இரண்டாவது அளவாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தனர்.
அதேநேரம் எஸ்ட்ராசெனெகா மற்றும் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைக் கலக்கும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் மேலும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது, பொது சுகாதார நிறுவனங்களாக இருக்க வேண்டும், தனி ஆட்களாக இருக்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.