நாட்டில் பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு இன்று முதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகளும் பஸ் போக்குவரத்து சேவைகளும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
அத்தியாவசிய சேவைகளை கவனத்திற்கொண்டு அத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளன.
காலையில் கடமைக்கு செல்வோருக்கு சில ரயில் சேவைகள் அதேபோன்று மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக சில ரயில் சேவைகள் என ரயில் சேவைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மாகாணங்களுக்கு இடையில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் தனியார்துறை ஊழியர்கள் ஆகியோரை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் நடைமுறையிலுள்ள வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி அந்த சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பஸ் மற்றும் ரயில்களில் பயணிப்போர் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது முக்கியமாகும்.
உதாரணமாக துறைமுகம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் போன்ற அத்தியாவசிய கடமைகளுக்காக வருவோர் அன்றைய தினத்தில் கடமைக்கு வருவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை கைவசம் வைத்திருப்பதும் முக்கியமாகும்.
அவ்வாறானவர்கள் பயணிப்பதற்காகவே இன்று முதல் சில பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.