கணவனின் கணினியில் உள்ள தரவுகள், ஆவணங்கள், குறுந்தகவல்கள் அல்லது சேமித்து வைகக்கப்பட்டுள்ள தகவல்களை பார்ப்பதனை தவிர்க்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது தனிப்பட்ட கணினிக்குள் மனைவி சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக குற்றம் சுமத்தி கணவனினால் கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவினை வழங்கியுள்ளது. தனது மனைவி கணினியில் இருந்த பல்வேறு தகவல்களை தரவிறக்கம் செய்து தனது கையடக்க தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்துக் கொண்டுள்ளதாக கணவன் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக மனைவி அறைக்குள் குரல் பதிவு உபகரணங்கள் உட்பட பொருத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அறை மூடப்பட்டிருக்கும் போது அறைக்குள் நுழைவதும், செயலிழக்கச் செய்யப்பட்ட கணினியை வலுக்கட்டாயமாக அணுகியமையும், தனியுரிமையை மீறிய செயலாகும்.
மனைவியின் இந்த செயலால் நியாயமான உரிமையையும் நம்பிக்கையை மீறப்பட்டுள்ளதாக கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னை பிரிந்து வாழும் தனது மனைவி தனது தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாகவும் எந்த அனுமதியுமின்றி தகவல்களை சேகரிக்க மனைவி தனது கணினியை செயற்படுத்திய விடயம், கணினி குற்றவியல் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் இது கடுமையான குற்றம் என்று கணவர் வாதிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டை செய்த கணவர் கொழும்பு பிரதேச அரச வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றுகின்றார். அவரது மனைவி வட மாகாண அரச வைத்தியசாலையில் விசேட வைத்தியராக பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் கணவனின் கணினியில் உள்ள தகவல்களை பார்ப்பதனை தவிர்க்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.