பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த வாரம் கொரோனா ஊரடங்கு விதிகளை முழுமையாக நீக்கவுள்ளதால்,
இது உலகிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பிரித்தானியாவில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் பெரும்பாலான மக்கள் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால், இறப்பு எண்ணிக்கை இங்கு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக வரும் திங்கட் கிழமை, அதாவது 19-ஆம் திகதி இங்கிலாந்தின் கொரோனா கட்டுப்பாடு விதிகளை அனைத்தையும் பிரதமர் போரிஸ் நீக்கவுள்ளார்.
ஆனால், இதற்கிடையில் இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதால், இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலகசுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி நாம் இப்போது உலகில் கொரோனாவின் மூன்றாவது அலையில் இருக்கிறோம், தயவு செய்து எந்த ஒரு நாடும் அவசரப்பட்டு கொரோனா கட்டுப்பாடு விதிகளை முழுமையாக நீக்கிவிட வேண்டாம் என்று கூறியுள்ளது.
ஆனால், இங்கிலாந்தில் இது நீக்கப்படவுள்ளது, உலகிற்கு அச்சுறுத்தலாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் பிரித்தானியா ஒரு மிகப் பெரிய போக்குவரத்து மையமாக இருக்கிறது.
இங்கிருந்து வெளிவரும் யாராலும், அது எளிதில் உலகம் முழுவதற்கும் பரவ வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கலந்து கொண்ட அவசர உச்சி மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்த ஆன்லை உச்சி மாநாட்டில், இத்தாலி, இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, தைவான் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போதைய மற்றும் முந்தைய அரசாங்க ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நியூசிலாந்து அரசாங்கத்தின் ஆலோசகர் Michael Baker, விஞ்ஞான நிபுணத்துவத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் எப்போதும் பிரித்தானியாவின் தலைமைத்துவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இது சரியானதாக இருக்காது, அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைக் கூட பின்பற்றவில்லை என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் José Martin-Moreno, ஏன் இப்படி ஒரு திடீர் முடிவு, உங்களிடம் நிபுணத்துவம் வாய்ந்த அறிவியாளர்கள் இருந்த போதும், இது ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
இதே போன்று விஞ்ஞானிகள் பலரும் இது சரியான முடிவு கிடையாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் பிரதமர் போரிஸ் தன்னுடைய முடிவை மாற்றுவாரா அல்லது சில கொரோனா கட்டுப்பாடுகளை மட்டும் தளர்த்துவாரா என்பது வரும் 19-ஆம் திகதி தெரியும்.