கோட்டாபய – மஹிந்த அரசாங்கத்தின் அடக்கு முறை ஆட்சி மற்றும் பொருள் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களின் பங்களிப்புடன் வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், ‘அரசே பொருட்களின் விலையேற்றத்தை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், போராடும் மக்கள் மீது பொலிஸாரை ஏவாதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, இலங்கையின் கடல் வளத்தை அழிப்பதற்கு துணை போகாதே, உரத்தடையை நீக்கு, விவசாயிகளுக்கு உடன் தீர்வு தா, பெண்கள் மீதான சுமைகளை அகற்று, அந்நிய வல்லரசுகளின் ஆதிகாரத்திற்கு இடமளிக்காதே’ உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும், விலையேற்றத்தை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கெண்டிருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.