டயகம சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த நபரிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொரள்ளை, பௌத்தாலோக வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டிலிருந்த சிறுமி ஒருவர் எரிகாயங்களுடன் கடந்த ஜூலை 3ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்தார்.
அது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு, பொரள்ளை பொலிஸார் உடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
அதேபோல் நேற்றைய தினம் ரிஷாத்தின் மனைவியின் பெற்றோரிடம் மீண்டும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
மேலும் அந்த சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த நபரிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. சிறுமி டயகம பிரதேசத்தில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரேத பரிசோதனையின் அறிக்கையின் பிரகாரம் குறித்த சிறுமி பல தடவை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. இதற்காக அனைத்து வகை சாட்சிகளையும் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.