யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் பெரும் குளறுபடி இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலர்களால் இறுதிப்பட்டியல் எனத் தெரிவித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களுக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பட்டியலை காட்சிப்படுத்துமாறு பிரதேச செயலர்கள் பணிக்கப்பட்டனர்.
அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் 187 பேரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
முன்னைய பட்டியலிலிருந்து 187 பேர் நீக்கப்பட்டு புதிதாக 187 பேர் உட்புகுத்தப்பட்டுள்ளனர்.
கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சால் யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 10 லட்சம் மற்றும் 6 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு வகையான வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவற்றுக்குரிய பயனாளிகள் தெரிவு மார்ச் மாதம் இடம்பெற்றது. ஏப்ரல் மாதம் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டது.
மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் பிரதேச செயலகத்தில் முறைப்பாடுகளை பரிசீலனை மேற்கொள்ளும் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியல் பிரதேச செயலர்களின் ஒப்பத்துடன் ஏப்ரல் மாத இறுதியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரதேச செயலர்கள் ஒவ்வொருவராலும் அனுப்பி வைக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு மாவட்டச் செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டது.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்ட பயனாளிகளின் விவரத்தை கடந்த வாரம் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்தநிலையில் கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலரால், சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலை மீண்டும் காட்சிப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைவாக பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்களில் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இணைத்தலைவர்களின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலிலிருந்து 187 பேரின் பெயர்கள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக புதிதாக 187 பேரின் பெயர்கள் உள்புகுத்தப்பட்டுள்ளன.
இதனை விட தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் தொடர்பில் இதுவரையில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 49 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை.
இன்று திங்கட்கிழமையுடனேயே இறுதிப்படுத்தப்படும். அதன் பின்னரே இணைத் தலைவர்களின் அனுமதிக்கு சமர்ப்பித்த பட்டியலிலிருந்து தற்போது காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலிலும் எத்தனை பேரின் விவரங்கள் நீக்கப்பட்டு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடியும்.