யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஓட்டோ வழங்கும் நிகழ்வு யாழ். பிரதம பொலிஸ் நிலையத்தில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு பொலிஸ் நிலையங்களுக்கான ஓட்டோக்களை வழங்கி வைத்தார்.
நாட்டில் சட்டம் – ஒழுங்கை நடைமுறைப்படுத்தி குற்றங்களைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டின் பிரதமர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கென 2 ஆயிரம் ஓட்டோக்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குக் கையளிக்கப்பட்ட 40 ஓட்டோக்களும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று யாழ். பிரதம நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே ஆகியோர் கலந்துகொண்டு யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் ஓட்டோக்களைக் கையளித்தனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரண்டு ஓட்டோக்கள் வழங்கி வைக்கப்பட்டன.