ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) ஒப்புதல் அளித்த தடுப்பூசிகளை தவிர்த்து, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியுடன் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை இப்போது ஏற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை, EMA ஒப்புதல்அளித்திருந்த ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அங்கீகரித்தது.
ஆனால், இப்போது கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அனைத்து பயணிகளையும் நுழைய அனுமதித்துள்ள 14-வது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரான்ஸ் மாறிவிட்டது.
பிரான்ஸின் இந்த முடிவு, ஏற்கெனெவே கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பிரித்தானிய மற்றும் கனேடிய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என அறியப்படுகிறது.
மேலும், இரண்டு-ஷாட் தடுப்பூசிகளான ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளில், இரண்டாவது டோஸ் பெற்ற நபர்களை இப்போது ஒரு வாரத்திற்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று பிரெஞ்சு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இரண்டாவது டோஸுக்குப் பிறகு 2 வாரங்கள் கழித்தே (14 நாட்கள்) ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
பிரான்சைத் தவிர, ஏற்கெனவே 15 நாடுகள், அதில் 13 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஷெங்கன் பகுதி நாடுகள் இந்திய உற்பத்தி தடுப்பூசியான கோவிஷீல்டை அங்கீகரித்ததாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானியாக பணியாற்றும் இந்திய மருத்துவ விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறினார்.
கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஜேர்மனி , கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து , ஸ்லோவேனியா, ஸ்பெயின் , சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும்.