சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை தொடர்பில் மோசடிகள் இடம்பெற்றால் வவுனியா பாவனையாளர் அதிகார சபையினரை தொடர்பு கொள்ளுமாறு அதன் பொறுப்பதிகாரி நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமையல் எரிவாயுவிலை தொடர்பான மோசடிகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம். நாடு முழுவதும் வீட்டுப் பாவனைக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு அண்மைக்காலமாக இரு வேறுபட்ட அளவுகளில் சந்தையில் விற்பனை செய்யப்படுவது நுகர்வோர் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது.
12.5 KG சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை வவுனியா மாவட்ட எல்லைக்குள் ரூ.1559 ரூபாயாக உள்ளது எனினும் கடந்த சில மாதங்களாக 18-லீற்றர் பிறிமியம் என அறிமுகம் செய்யப்பட்ட எரிவாயு கொள்கலனானது ரூ.1461க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் எடை உண்மையில் 9.18KG என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முதல் இவ்வாறு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18-L Premium எரிவாயு கொள்கலனின் புதியவிற்பனை விலைதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் நேற்று முதல் வவுனியா மாவட்ட எல்லைக்குள் புதியவிலையாக ரூ.1216.00 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 12.5 KG சமையல் எரிவாயு கொள்கலன் , 18-L Premium என அறிமுகம் செய்யப்பட்ட எரிவாயு கொள்கலன் ஆகிய இரண்டுமே கொள்கலனின் அளவு ஒன்றாகவே இருக்கும்.
அதேவேளை உள்ளீடு செய்யப்பட்ட (நிரப்பப்பட்ட) எரிவாயுவின் அளவுகளில் உள்ள வேறுபாடே விலை வேறுபட காரணமாகும். அத்துடன் விற்பனை நிலையங்களில் எரிவாயு கொள்கலன்களின் நிறை/அளவு மற்றும் அவற்றின் விலை என்பன தெளிவாக காட்சிப்படுத்தல் அவசியமாகும்.
இது தொடர்பாக மோசடிகள் இடம்பெற்றால் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் முறைப்பாடு செய்யுமாறு கேட்கப்படுகிறீர்கள். நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஏனைய அளவுகளை கொண்ட எரிவாயு கொள்கலன்களின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று குறித்த அறிக்கையில் உள்ளது.
வவுனியா மாவட்ட எல்லைக்குள் எரிவாயு கொள்கலன்களின் விற்பனை விலை விபரம்.12.5 KG-1559.00, 18L / 9.18 KG- 1216.00 37.5 KG- 6463.00 5 KG- 633.00 2 KG- 294.00 வெற்று எரிவாயு கொள்கலன் ஒன்றின் விற்பனை விலை 12.5 KG- 5450.00 37.5 KG- 8950.00 5 KG- 4250.00 2 KG- 2850.00