அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கையெழுத்திடப்படும் உடன்படிக்கையின் படி அடுத்த வாரம் அரிசி விலை குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ நெல்லை 50 முதல் 52 ரூபா விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அரிசி விநியோகம் தொடர்பிலும் அவர்களுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்படும். இந்த உடன்படிக்கை கையெழுத்தானதும், நாடு ரக அரிசியின் விலையை 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும்.
இலங்கையில், 10 லட்சம் விவசாயிகள் உள்ளனர். 2கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் நாடு வகை அரிசியை உட்கொள்கின்றனர். இன்று, ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபா, கீரி சம்பா 225 ரூபா என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை அரைவாசி விலைக்கு குறைக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். நெல்லின் விலை உயர்வு கேட்டு விவசாயிகளை ஜேவிபி தூண்டி விடுவதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இருப்பினும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நெல் ஒரு கிலோ ரூ .30 க்கே விற்பனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், ஜே.வி.பி அந்த அரசாங்கத்துடன் நன்மைகளுக்காக ஒட்டிக்கொண்டிருந்தது. எனவே அவர்கள் மௌனத்தை கடைப்பிடித்தார்கள்.
இன்று, நாமல் கருணாரத்ன தலைமையிலான ஜே.வி.பி-யுடன் இணைந்த அனைத்து இலங்கை விவசாயிகள் சங்கம், விவசாயிகளுக்காக குரல் கொடுப்பதற்காக ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்துள்ளது என்று மஹிந்தானந்த தெரிவித்தார்.
ஜே.வி.பிக்கும் ரசாயன உர விநியோகஸ்தர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதன் காரணமாகவே ரசாயன உரத்தை கோரி ஜே.வி.பி.யால் போராட்டங்கள் தூண்டப்படுகின்றன.
ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூட தனது தேர்தல் அறிக்கையில், இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார். இப்போது, அவர் வேறுவிதமாக பேசுகிறார் என்றும் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.