இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதில் இலங்கை சுற்றுலா அமைச்சகம் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக தற்போது 21 நாடுகள் இலங்கைக்கு பயணிக்க தடை விதித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நோர்வே, பஹ்ரைன், நேபாளம், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கட்டார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வெளியுறவு அமைச்சகம் மூலம் கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக உலகளாவிய ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த மாதம் முதல் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய சந்தையில் புதிய விளம்பர திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் செயல் திட்டத்தை செயல்படுத்த அமைச்சில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த சிறப்பு ஊக்குவிப்பு திட்டம், ஆகஸ்ட் முதலாம் திகதி செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தடுப்பூசி இயக்கத்தை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.அதற்குள் மொத்த மக்கள் தொகையில் 60% மானவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்