மட்டக்களப்பில் இறால் பண்ணைகளிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பண்ணை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் அரசாங்கத்திடம் நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன் தீவுப் பகுதியில் அமைந்துள்ள 20 இறால் வளர்ப்புப் பண்ணைகள் கடந்த 26ஆம் திகதி பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பண்ணையாளர்கள் கரையாக்கன் தீவில் 20 வருடங்களுக்கு மேலாக இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது மழை, வெள்ளம் காரணமாக பெருமளவான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் மழை, வெள்ளத்தில் இறால்கள் திரளாக அடித்துச் செல்லப்பட்டதால் ஒவ்வொரு இறால் பண்ணையாளரும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வீதம் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாவை இழந்துள்ளதாக கவலையோடு தெரிவிக்கின்றனர்.