நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவலை குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரையில் வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கி நடிகை யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அதே காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி தூக்கி வீசப்பட்டு பலியானார். யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பும், கால் எலும்பும் முறிந்துள்ளது. வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
எலும்பு முறிவை சரிசெய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. சில தினங்கள் கழித்து மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
இது குறித்து யாஷிகாவின் தாய் உள்ளிட்ட குடும்பத்தினர் கூறும்போது, யாஷிகா சுயநினைவுடன் இருக்கிறார்.
தோழி பவானி இறந்தது அவருக்கு தெரியாது. எங்களிடம் பவானி எப்படி இருக்கிறார் என்று யாஷிகா விசாரித்தபோது வெண்டிலேட்டரில் இருப்பதாக சொல்லி இருக்கிறோம்.
அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2 மாதங்கள் கழித்துத்தான் யாஷிகாவால் நடக்க முடியும் என்றும், 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர் என தெரிவித்துள்ளனர்.