நடிகை யாஷிகா விபத்தில் பலியான தனது தோழி பவணி குறித்து முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ள யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரை ஓட்டிய யாஷிகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த தனது தோழி பவணி குறித்து, யாஷிகா அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப்பெரிய விபத்திலிருந்து இப்படி காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை பழிப்பதா என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் நான் பவணியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்பது தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன். ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன்.
உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் நாளை தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள யாஷிகா, பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் சொன்னாலும், பெரும்பாலானோர் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.