கிளிநொச்சியில் ஒரே நாளில் 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் உள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் வடக்கில் அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் நெருக்கடி மிக்கதாக அமையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கிருஸ்ணபுரம், பாரதிபுரம் வைத்தியசாலைகளில் நோயாளிகளால் நிரம்பியிருப்பதனால் தற்போது முறிகண்டியில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பபட்டு வருகின்றனர்.
எனினும் அங்கு பெண்கள் மாத்திரமே அனுப்ப முடியும் எனவும் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில்,ஜெயபுரம், கரைச்சி, கண்டாவளை என மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 25 பேர், அறிவியல்நகரில் உள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் இருவருமாக பரலாக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் தொடக்கம் இன்று வரையான காலத்தில் 445 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.