கியூபெக் மாகாண நிர்வாகம் அமுலுக்கு கொண்டுவர இருக்கும் கட்டாய தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தடுப்பூசி கடவுச்சீட்டுக்கு எதிராக சனிக்கிழமை மொன்றியலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
செப்டம்பர் 1ம் திகதி முதல் மாகாணத்தில் தடுப்பூசி கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்படும் என முதல்வர் Francois Legault தெரிவித்துள்ளார்.
இதனால் பெருமளவில் மக்கள் கூடும் விழாக்கள், மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கொரோனா தொற்று பரவாமல் கண்காணிக்கவும் முடியும் என கியூபெக் நிர்வாகம் நம்புகிறது.
ஆனால் தடுப்பூசி கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் பொதுமக்களிடம் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்வைத்துள்ளனர்.
மட்டுமின்றி தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பான அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளும் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பாக விவாதம் தேவை என குறிப்பிட்டுள்ளதுடன், அரசின் இந்த கடும்போக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.