கொரோனாத் தடுப்பூசிகளைத் துரிதமாகப் பெறுமாறு அரசை நாம் வலியுறுத்தும்போது பாணியின் பின்னால் ஓடினர். பானையை ஆற்றில் போட்டுக் கூத்துக் காட்டினர். அரசு இவ்வாறு இழைத்த தவறுகளால் மக்கள் இன்று செத்து மடிகின்றனர் என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
“மக்கள் உறங்கும்வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த அரசு மடத்தனமான முடிவுகளையே எடுக்கின்றது. தனக்குப் போதிய அனுபவம் இல்லாவிட்டால் முடியுமான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மிகவும் மோசமானதொரு காலகட்டத்திலேயே தற்போது இருக்கின்றோம். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ள அரசு, ஊடகங்கள் வாயிலாக வேறு விதத்தில் பிரசாரம் முன்னெடுக்கின்றது.
உண்மை அதுவல்ல. மரண வீதத்தில் எமது நாடு முன்னிலை வகிக்கின்றது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில், போலியான தகவல்களையும், தரவுகளையுமே அரசு வெளியிடுகின்றது.
அவ்வாறு மோசடி செய்து மக்களைத் தவறாக வழிநடத்தாமல் உண்மை நிலைவரத்தைத் தெளிவுபடுத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம். அரச மருத்து அதிகாரி சங்கங்கள், பொதுச் சுகாதார அதிகாரி சங்கம் மற்றும் சுகாதார துறைசார்ந்தோர் நாட்டை முடக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
இதனைச் செய்யாமல், துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்காமல் தனது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே போலித் தகவல்களை அரசு இவ்வாறு வெளியிட்டு வருகின்றது. தடுப்பூசிகளைத் துரிதமாகப் பெறுமாறு அரசை நாம் வலியுறுத்தும்போது பாணியின் பின்னால் ஓடினர்.
பானையை ஆற்றில் போட்டுக் கூத்துக் காட்டினர். அரசு இவ்வாறு இழைத்த தவறுகளால் மக்கள் இன்று செத்து மடிகின்றனர். முதலாவது அலையின்போது நாட்டை மூடுமாறு வலியுறுத்தினோம். வேட்புமனுத் தாக்கல்வரை அரசு காத்திருந்தது.
இரண்டாவது அலை ஏற்பட்டபோது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும்வரை அரசு மௌனம் காத்தது. தற்போது என்ன செய்யபோகின்றது எனத் தெரியவில்லை. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தூங்கும்வேளையில் ஊரடங்கு பிறப்பிப்பதில் என்ன பயன்? இவ்வாறு ஊரடங்கு பிறப்பிப்பதும் ஒன்று, பிறப்பிக்காமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே, நாட்டை முடக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம். நமது உயிரை நாமே பாதுகாத்துக்கொள்வோம். ஜனாதிபதி போதிய அனுபவம் இல்லாவிட்டால், முடியுமான ஒருவருக்குப் பொறுப்பை வழங்கிவிட்டுப் பதவி விலக வேண்டும்” – என்றார்.