கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லுவது சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் சட்ட விரோதமாக சிலர் சொல்லி விடுவதால் இப்படிப்பட்ட கருக்கலைப்புகள் நடந்து வருகிறது. மும்பை தாதர் பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது.
அப்பெண்ணின் கணவர், மாமியார் இருவரும் வழக்கறிஞர்கள். கணவரோட தங்கை ஒரு பெண் மருத்துவர். 2007ல் திருமணம் செய்த இத்தம்பதிக்கு 2009ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையும், 2011ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் கணவனோ தன்னுடைய குடும்ப சொத்தை காரணம் காட்டி ஆண் குழந்தைதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.
அடுத்தடுத்து அப்பெண் கருவுற்றாள். ஆனால், கருவில் இருப்பது பெண் சிசு என்று தெரிந்ததும் கருவை கலைக்கச் சொல்லி இருக்கிறார். இப்படி 8 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு பின்னரும் பிடிவாதமாக ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று சொல்லி மனைவியை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, பாங்காங்கில் சிறப்பு சிகிச்சை கொடுத்துள்ளார் அப்பெண்ணின் கணவர். அதன் பின்னர் இந்தியாவிலும் சில அறுவை சிகிச்சைகளை செய்யச் சொல்லி இருக்கிறார்.
இதற்கெல்லாம் மேலாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு ஊசிகளையும் மனைவிக்கு செலுத்தி உள்ளார். ஒரு ஊசி இரண்டு ஊசி அல்ல கிட்டத்தட்ட 1500 ஸ்டீராய்டு ஊசிகள் அவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் ஆண் குழந்தை உருவாகவில்லை. ஆனால் கணவரும் விடுவதாக இல்லை. இதற்கு மேலும் இந்த கொடுமையை அனுபவிக்க முடியாது என்று அப்பெண் போலீசில் புகார் கொடுத்தாள்.
இதனையடுத்து, பெண்ணுக்கு சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்தது குறித்தும், உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தது குறித்தும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.