ஈழத் தமிழர்களின் இன்னல்களை அரசியல் ஆக்காமல், பொதுநல நோக்கோடு முன்னெடுக்க சமதா கட்சி முடிவெடுத்துள்ளதாக சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் கோன் தெரிவித்துள்ளார்.
சமதா கட்சியின் நிறுவனரும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியுமான ‘ஜார்ஜ் பெர்னாண்டஸ்’ அவர்களின் கனவாகிய ‘தமிழ் ஈழம்’ அடைந்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் சமதா கட்சி பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், ஈழம் என்றொரு நாடு வேண்டுமென்பதில் சமதா கட்சி உறுதியாக உள்ளதாகவும், அந்தக் கட்சி கூறியுள்ளது.
ஈழத் தமிழருக்கு ஆதரவு கோரி இதுவரை இந்திய ஒன்றியத்தின் அனைத்து தலைவர்களையும் சந்தித்துள்ளதாகவும், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும்,தனித் தமிழீழம் அமைக்க ஈழத் தமிழருக்கு உதவும் தமது முயற்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, உதவ் தாக்கரே போன்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் சமதா கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஏ. கோன் தெரிவித்தார்.