மூட்டு வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் இதில் கொடுத்துள்ள முத்திரைகளை மட்டும் பயிலுங்கள். தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் பயிலுங்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்.
இன்று நிறைய மனிதர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படுகின்றது. அதனால் ஒரு பக்க கை, கால்கள் செயலிழப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல், தங்களது அன்றாட கடமைகளை மற்றொருவர் உதவியால் செய்யும் நிலை ஏற்படுகின்றது. அதேபோல் மூட்டு வலி, மூட்டு வீக்கத்தாலும் நிறைய மனிதர்கள் நடக்க முடியாமல், மாடி ஏற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு யோகா சிகிச்சையாக நாம் பார்க்கவுள்ளோம். இதனை அனைவரும் பயிலுங்கள். இது முடக்கு வாதம், மூட்டு வலி வராமல் நம்மை காக்கும் கவசமாக அமையும். மூட்டு வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் இதில் கொடுத்துள்ள முத்திரைகளை மட்டும் பயிலுங்கள். தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் பயிலுங்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்.
மனித உடல்
மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்களிலும் பஞ்ச பூத தன்மைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளது. இவை அனைத்தையும் கை விரல் நுனிகள் கட்டுப்படுத்துகின்றன. பெருவிரல் – நெருப்பு, ஆள்காட்டி விரல் -காற்று, நடு விரல் – ஆகாயம், மோதிர விரல் – நிலம், சுண்டு விரல் – நீர்.
முத்திரை என்பது கை விரல் நுனிகளில் ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தல். கை விரல் நுனி என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் விரல் நுனியல்ல, இது ஒவ்வொரு பூத மூலகமாகும். இதன் மூலம் நமது உடலில் பஞ்சபூதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யலாம். அந்த வகையில் நாம் வாதம், முடக்கு வாதம், மூட்டு வலி வராமல் பாதுகாக்கும் முத்திரை சிகிச்சையாக பார்க்கவுள்ளோம்.
வாயு முத்திரை செய்முறை
தரையில் விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை முப்பது வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறந்து ஆள்காட்டி விரலை உள்ளங்கைக்குள் மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். படத்தை பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
அபான முத்திரை செய்முறை
நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராகஇருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை முப்பது வினாடிகள் கவனிக்கவும். இப்பொழுது கண்களை திறந்து மோதிரவிரல், நடுவிரலை மடக்கி அதன் நுனிபகுதியை கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.
அபான வாயு முத்திரை செய்முறை
நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை முப்பது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கண்களை திறக்கவும். முதலில் இருக்கைகளிலும் நடு விரல், மோதிர விரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். உடன் ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் அடியில் வைக்கவும். சுண்டுவிரல் மட்டும் தரையை பார்த்து இருக்கவேண்டும். இது அபான வாயு முத்திரையாகும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
மூன்று முத்திரைகளின் பலன்கள்
கை விரல்களில் உள்ள பிராண ஆற்றலை இருதயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் இதயம் புத்துணர்வு பெறுகின்றது. இருதயத்தை வலுப்படுத்துவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பிராண ஆற்றலை பெற்று சிறப்பாக செயல்படுகிறது.
உடலில் தச வாயுக்கள் என்றழைக்கப்படும் பத்து விதமான வாயுவும் நன்றாக இயங்கும். அதனால் வாயு சம்பந்தமான வாதம், முடக்கு வாதம், மூக்கடைப்பு, மூட்டுவலி வராமல் தடுக்கப்படுகின்றது. மூட்டு சவ்வுகளில் ஈரப்பதம் சரியான அளவில் இருக்கச் செய்கின்றது.
வலது மூளை, இடது மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாய்கின்றது. அதனால் வலது பக்க உறுப்புக்கள், இடப்பக்க உறுப்புக்கள் நல்ல பிராண ஆற்றலை பெற்று சிறப்பாக இயங்குகிறது.
மலச்சிக்கல் வராமல் வாழலாம். அதனால் வாயுத் தொந்தரவு, வாதம் மூட்டு வலி வராமல் வாழலாம்.
இந்த மூன்று முத்திரைகள் செய்தவுடன் கோமுகாசனம் செய்யுங்கள்.
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும்.
இடது காலை மடித்து வலது தொடை மீது வைத்து வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். நிமிர்ந்து அமர்ந்து இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின் புறம் கொண்டு வந்து முதுகை தொடவும். வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்கவும். சாதாரண மூச்சில் பத்து முதல் இருபது வினாடிகள் இருக்கவும்.
கால்களை மாற்றி ஒரு முறை செய்யவும். எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்குமேல் உயர்த்தி மடித்து செய்யவும். உடல் பருத்தல், ஆர்த்ரைடிஸ் இரண்டுமே நமது உடலில் ஏற்படும் கழிவு பொருட்களின் சேர்க்கையால் ஏற்படுவதாகும்.
வயிற்றில் ஏற்படும் மிகப் பொதுவான பிரச்சினை வாயுத் தொல்லையாகும். வயிற்றில் அளவுக்கதிகமான அமிலம் சுரந்து அஜீரணத்தை ஏற்படுத்துகின்றது. இத்துடன் அனேகமாக மலச்சிக்கலும் சேரும்பொழுது உடலில் உள்ள எல்லாத் திசுக்களிலும் அமில சுரப்பு அதிகமாகி, அதனால் மிகையான யூரிக் அமிலம் நம் உடலில் சேரும். இதுவே வாயுத் தொல்லை, மூட்டு வாதம் என்றழைக்கப்படுகின்றது.
இதற்கு மேற்கூறிய முத்திரைகளும் கோமுகாசனமும் மிகுந்த பலனைத்தருகின்றது. நமது உடலில் மலச்சிக்கல் வராமல் சரி செய்கின்றது. வாயுவை சமப்படுத்துகின்றது. ஜீரண மண்டலத்தை நன்கு இயங்கச் செய்கின்றது. அதனால் வாயுப் பிரச்சினைகள் வாதப்பிரச்சினைகள் நீங்கி வாழலாம்.
உணவு
இன்றைய நவீன உலகில் நாக்கு ருசிக்காக மசாலா பொருட்கள், மைதாவினால் ஆன உணவுகள் நிறைய வந்துள்ளது. குறிப்பாக மைதாவினால் செய்த புரோட்டா உண்பதால் அஜீரண கோளாறு, மலச்சிக்கல், ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கவும். நாம் எடுக்கும் ஒவ்வொரு உணவும், ஆரோக்கியத்தை நோக்கியிருக்க வேண்டும். ருசிக்காக உண்டு பின் வாயு பிரச்சினை, ஜீரண பிரச்சினை வரக் கூடாது. முடிந்த வரை பழ வகைகள், கீரை வகைகள், உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
கொய்யா பழம், ஆரஞ்சு பழம், மாதுளை பழம், கருப்பு திராட்சை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை கொத்தமல்லி, புதினா உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவு சாப்பாடு 8 மணிக்குள் மிதமான உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். அரை வயிறு இரவு சாப்பாடு போதும். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஆழ்ந்த உறக்கம் வேண்டும். அதிகமாக டீ, காபி பருகாதீர்கள். அதற்கு பதிலாக சுக்குமல்லி, கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்க்காமல் பருகுங்கள். தயிர் வேண்டாம். மோராக கடைந்து நீர் ஊற்றி பருகுங்கள்.
சுரைக்காய், பூசணிக்காய், கோவக்காய், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், பாகற்காய், புடலங்காய், அவரை, முட்டைகோஸ் உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.
முருங்கை கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிடுங்கள். முத்திரை, ஆசனம், உணவு முறை மூலம் மூட்டு வாதத்திற்கும், முடக்கு வாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.