அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.
“நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க உதவிகளை நம்பியிருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார் Sunraysia இனச் சமூகங்களின் கவுன்சிலின் புலம்பெயர் வழக்கு மேலாளர் வாலா சப்ரி.
இவர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா புறநகர் பகுதியில் ஊரடங்கு காலங்களில் நாள்தோறும் 200 உணவுப் பொட்டலங்களை பகிர்ந்து அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தற்காலிக இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளதாக அவர் கூறுகிறார். இணைப்பு விசா என்பது ஒருவரது குடியேற்ற நிலை தீர்மானிக்கப்படும் வரை ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக வாழ அனுமதிக்கின்றது.
அதே சமயம், அவர்களுக்கு அரசின் நல உதவிகள் வழங்கப்படுவதில்லை எனப்படுகின்றது.
பலர் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை, பணியாற்ற அனுமதிக்கப்படுபவர்களும் ஊரடங்கு காலங்களில் ஏற்படும் தொழில் முடக்கத்தால் உதவிகளை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.