வடக்கு இலங்கையின் உள்கட்டமைப்பு திட்டங்களில், சீனா தனது கால்தடத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய முயற்சிகளின் மீது இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது கடன் கொள்கைகளின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் ஆழமான மூலோபாய ஊடுருவல்களைச் செய்துள்ளது.
தற்போது தீவு தேசத்தில் முடிந்தவரை இந்தியக் கடற்கரைக்கு அருகில் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதியுடன் செயல்படுகிறது என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
“சீன பொருளாதார செயல்பாடு மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உத்தேசிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், பின்னர் மூலோபாய காரணங்களுக்காக சுரண்டப்படலாம், இது நிச்சயமாக இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனத் திட்டங்கள் பெரும்பாலும் தென்னிலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. “ஆனால் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இப்போது வட இலங்கையிலும் பல சீன முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
இது குறித்து இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரியில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள மூன்று தீவுகளில் சீன நிறுவனம் ஒன்றுக்கு காற்று மற்றும் சூரிய ஆற்றல் திட்டத்தை வழங்கும் இலங்கையின் முடிவுக்கு இந்தியா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
உள்ளூர் வாசிகளின் எதிர்ப்புகளை மீறி, மற்றொரு சீன கூட்டு முயற்சியான, கடல் அட்டைகளை வளர்ப்பதற்காக, வட இலங்கையின் ஒரு கடலோர கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுபோன்ற பல ஊடுருவல்கள் காணப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முத்தரப்பு உடன்படிக்கையில் இருந்து பின்வாங்கியமையை அடுத்து இலங்கை மீது இந்தியா தொடர்ந்து வருத்தத்தில் உள்ளது.
எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 வருட குத்தகை முதல் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் வரை, தீவு நாட்டில் சீனா சுமூகமாகப் பயணிக்கிறது.
இலங்கையைத் தவிர, சீஷெல்ஸ், மொரிஷியஸ், மாலத்தீவு, பங்களாதேஷ், மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் கடல்சார் இணைப்புகளை ஏற்படுத்தி, முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் சீனா தனது ஆதிக்கத்தை பரப்பி வருகின்றது” என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.