முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவிலும் மற்றும் பனையடி கிராமத்திலும் திட்டமிட்ட சட்டவிரோத கடற்கரை மணல் மற்றும் குடியிருப்பு காணிகளிலும் பாரிய அளவில் மணல் அகழ்வு நடைபெறுவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது நாட்டில் கோவிட் கால ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலமென்பதால் அதனைப் பயன்படுத்தி சிலர் இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதிகாலை நேரங்களில் கடற்கரை பகுதிக்கு அண்மையில் உழவு இயந்திரங்களில் ஏற்றி அதன் பின் டிப்பர் ரக வாகனங்களில் பரிமாற்றம் செய்யப்பட்டு இராணுவ சோதனை இல்லாத வீதிகளால் கொண்டு செல்லப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட பத்து லோட் மணல் வெளி மாவட்டத்திற்குச் செல்வதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த மணல் அகழ்வால் பிரதேசம் பாரிய அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது கரையோர பகுதியாகக் காணப்படுவதால் சுனாமி போன்ற பேராபத்துக்கள் ஏற்படும் போது கடல் அரிப்பினால் கிராமங்களிற்குள் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்படும் என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் விரைந்து களப்பணி மேற்கொண்டு மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதுடன், கிராமத்தில் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பாரிய அழிவையும் தடுத்து நிறுத்தி குறித்த விடயத்திற்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கரைதுறைப்பற்று பிரதேச சபையின் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஆர்.கஜனிடம் மக்கள் முறையிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.