வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பணியாளர்களுக்கு அந்தந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிகளை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாது.
வழமையாக அந்தந்த பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே வழங்க முடியும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தடுப்பூசி வழங்குமாறு எழுத்து மூலம் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கவில்லை.
குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்கும் அல்லது கற்கைநெறிகளை தொடரக் காத்திருக்கும் மாணவர்கள் அந்தந்த பல்கலைக்கழங்களினால் விதந்துரைக்கப்படும் தடுப்பூசிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடுமையான ஒவ்வாமை பிரச்சினைகளினால் பாதிக்கப்படுவோர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில்லை, இவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு மாவட்ட ரீதியில் குறைந்தபட்சம் ஒரு வைத்தியசாலையாவது ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என உபுல் ரோஹன கோரியுள்ளார்.