உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி – கொண்டாடும் ஆதரவாளர்கள் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதிக்கு புதிய பதவி ஒன்றை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்ட தொடரின் கடைசி நாளான இன்று சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு புதிய உறுப்பினர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெற்றியழகன், வி.ஜி.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, செந்தில்குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனைச்செல்வன் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கு ஜவாஹிருல்லா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மை பல்கலை கழகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன், கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் ஆகியோரும், கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு மணிகண்ணனும்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட இந்த புதிய பொறுப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின்ட்விட்டர் பக்கத்தில் கல்வித்தளத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம்.அதன் அலுவல் சாரா ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அறிவிப்பை வெளியிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கும் என் நன்றி என தெரிவித்துள்ளார்.