அனுராதபுரம் சிறைச்சாலையின் சிசிடிவி காட்சிகளை அழிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா இதனை கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
குடிபோதையில் அமைச்சர் ஒருவர் சிறைக்குள் நுழைந்து கைதிகளை சித்திரவதை செய்தபோது, சிறை அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சரின் நடத்தைக்கு சிறை அதிகாரிகள் இடம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய சுயாதீன குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும், துப்பாக்கியுடன் சிறைக்குள் நுழைந்த அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.