மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு ஆசிரியர்களைப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவ்வாறாக எவரேனும் அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ முறையிட முடியும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றமை மற்றும் அச்சுறுத்தல் விடுக்கின்றமை குற்றமாகும் என்பதால், அவ்வாறான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.