சிறைச்சாலைக்குள் குடிபோதையில் நுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தே தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. இதன்போது பொருத்தமான தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அதன் பின்னர் தீர்மானம் எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற லொஹான் ரத்வத்தே, அங்கிருந்த தமிழ் கைதிகளை ஆயுத முனையில் அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.