வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரையில், விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் நிலையில் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் வகையிலான நடைமுறையொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் முடிவுகளை வழங்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுகூட கட்டமைப்பு இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாளை மறு தினம் முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப் பெறும் வரையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நிலையில் அவர்களிடமிருந்து விடுதிகள் அதிக கட்டணங்களை வசூலிப்பது தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டமானது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.