நாளை (26-ந் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19-ந் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை (26-ந் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. அந்தவகையில் சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.