ஐ.நா. பொதுசபை கூட்டம் முடிந்த பிறகு நியூயார்க்கில் இருந்து இன்று இரவு 9.30 மணி அளவில் அவர் இந்தியா புறப்படுகிறார். நாளை காலை 11.30 மணிக்கு டெல்லி வந்தடைகிறார்.
ஐ.நா.பொதுசபை கூட்டம் மற்றும் நாற்கர கூட்டமைப்பின் (குவாட்) மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22-ந்தேதி காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றார்.
வாஷிங்டன் சென்ற மோடி முதலில் அங்குள்ள 5 முன்னணி தொழில் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை சந்தித்து உரையாடினார். அன்று இரவே அவர் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2-வது நாளான நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக மோடி வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இருநாட்டு உறவிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குவாட் மாநாடு நடந்தது. இதில் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோருடன் மோடி கலந்து கொண்டார்.
உலக நன்மைக்கான திட்டங்களை குவாட் செயல்படுத்தும் என்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி வாஷிங்டனில் இருந்து நியூயார்க் புறப்பட்டு சென்றார். நியூயார்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்துக்கு வெளியே வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பெரும் திரளாக குவிந்து மோடியை வரவேற்றனர். அவர்கள் பிரதமரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
“வந்தே மாதரம் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே” போன்ற கோஷங்களை எழுப்பினர். கூடி இருந்த அனைவரையும் நோக்கி அவர் கையை அசைத்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சில பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி ஐ.நா. பொதுசபையில் உரையாற்றுகிறார். அவர் “என்ன சொல்லப் போகிறார்?” என்று உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல், பருவ நிலை மாற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்து ஐ.நா. பொது சபையில் கவனம் செலுத்தி பேசுவேன் என்று அமெரிக்கா புறப்பட்டு செல்லும் முன்பு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவர் இந்த விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. பொதுசபை கூட்டம் முடிந்த பிறகு நியூயார்க்கில் இருந்து இன்று இரவு 9.30 மணி அளவில் அவர் இந்தியா புறப்படுகிறார். நாளை காலை 11.30 மணிக்கு டெல்லி வந்தடைகிறார்.