ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், உயிரிழந்தவர்களின் உடலை பொது மக்களின் முன்னிலையில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரின் சடலங்கள் இவ்வாறு தொங்கவிடப்பட்டதாகவும் அவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த நால்வரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றதாகவும், அவர்கள் அனைவரதும் சடலங்கள் கிரேன் மூலம் ஹீரட் நகரின் மையப்பகுதியில் தொங்கவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நிறைவேற்றியதைபோல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் முல்லா நூருதீன் துராபி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகிய ஒரு நாள் கழிந்து பொது மக்கள் முன்னிலையில், நால்வரின் சடலங்கள் தொங்கவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்து உள்ள தலிபான்கள், அங்கு ஷரியத் சட்டப்படி ஆட்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதன்படி, குற்றங்கள் செய்தால் கை-கால்கள் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் நிறைவேற்றியதை போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் எனவும் மரண தண்டனைகள், கை-கால்களை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சிறைத்துறை பொறுப்பாளர் முல்லா நூருதீன் துராபி அறிவித்துள்ளார்.