நாட்டில் நாளையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சுமார் 5500 பேருந்துகள் நாளை முதல் இயங்கத் தயாராக உள்ளது.
இந்த நிலையில் இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் அனைத்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்துறைப் பிரிவின் ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரது விடுமுறை நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இ. போ. சபை ஊழியர்களை பணிக்கு வருமாறு அனைத்து டிப்போ மேற்பார்வையாளர் களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
மேலும் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இன்றி பாதுகாப்பாக பயணிக்கத் தேவையான எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.