பரீட்சைக்கு சரியாக படிக்கவில்லை என தனது மகனை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றியதினம் இந்த உத்தரவை பிறப்பித்த காலி நீதவான் ஹர்ஷன கேகுணவெல , சந்தேக நபரின் மனநலத்தை பரிசோதித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார். தந்தையினால் பலமாக தாக்கப்பட்ட நிலையில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதான மாணவன் நேற்று காலை உயிரிழந்தார்.
சம்பவத்தில் காலி மகாமோதரா, சியம்பலகஹவத்தவில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள உயிரிழந்த மாணவன், வீட்டில் சரியாக படிக்கவில்லையென கூறி வீட்டிலிருந்த தும்புத்தடியினால் தந்தை கொடூர தாக்குதல் நடத்தியதில் மாணவனின் தலையிலும் அடி விழுந்தது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற நிலையில் மாணவன் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனையடுத்து மாணவனின், 49 வயதுடைய தந்தை காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.